இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
கிரகங்களின் பலம்பற்றி ஆராயும்போது, கிரக அவஸ்தைகளை அறியவேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு ராசியும் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, பாலன், குமாரன், இளைஞன், முதியவன், மரணம் என்ற வரிசைக்கிரமத்தில் அந்த ராசியில் நிற்கும் கிரகம் அவஸ்தையை அனுபவிப்பதாகக் கருதவேண்டும். இந்த அமைப்பு ஆண் ராசிகளில் நேர்வரிசையிலும், பெண் ராசிகளில் தலைகீழ் வரிசையிலும் இருக்கும். இதில் குமாரன் மற்றும் இளைஞன் எனும் அவஸ்தைகளிலுள்ள கிரகங்கள் வலிமையுடனும், முதியவன், மரணம் எனும் அவஸ்தைகளிலுள்ள கிரகங்கள் வலிமையிழந்தும் காணப்படும். கோட்சாரத்தில் கோள்களின் வலிமையைக் காணவும் இந்த முறையே உபயோகமாகும்.
சாதகமான கிரகங்கள், கிரக அவஸ்தையில் வலிமை குன்றினால் நல்ல பலன்களைத் தர இயலாமல் போகும்.
அதுபோலவே, சாதகமற்ற கிரகங்கள் கிரக அவஸ்தையில் வலிமை குன்றினால் தீய பலன்களைத் தர இயலாது. இந்த முறையில், கிரக அவஸ்தைகளால் கிரகங்களின் வலிமை கணக்கிடப்பட வேண்டுமென்பதே "கந்தர்வ நாடி' கூறும் கருத்து.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gandaravanadi.jpg)
""சகல உயிர்களுக்கும் உணவளிக்கும் தயாநிதியே! ஜீவர்களுக்கு ஏற்படும் காரியத்தடைகள் நீங்கி காரிய சித்தி ஏற்பட நல்ல உபாயத்தை தாங்கள் கூறியருள வேண்டும்'' என அன்னை அழகம்மை, திருக்கலிக்காமூரில் அருள்புரியும் சுந்தரேஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
அதற்கு வில்வவனநாதர் உரைத்தது- ""ஜீவர்களின் வேண்டுதலை ஏற்று அவர்களுக்கு தாயைப்போல் தயை காட்டக்கூடிய சக்தி ஸ்தல விருட்சங்களுக்கே உண்டு.
மாமரமும் வில்வமரமும் வழிபடுவோருக்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் தரும். ஆலமரம் அறிவாற்றலையும், வாழை மாங்கல்ய பலத்தையும் அதிகரிக்கும். வன்னிமரம் வளம் பெருக்கும். அத்திமரம் பிதுர் தோஷம் போக்கும். பனைமரம் புத்திர பாக்கியத்தைத் தரும். இலுப்பை மரத்தருகில் செய்யும் ருத்ர ஜெபமும், அரசமரத்தடியில் செய்யும் சமஷ்டி காயத்ரி ஜெபமும் பேராற்றலைத் தரும். மரங்கள் தங்களை தஞ்சமடைவோரை மழைநீரால் ஆசிர்வதிப்பதுபோல், ஸ்தல விருட்சங்கள் தங்களை வழிபடுவோரின் மனதைக் குளிரச்செய்கிறது.''
""சூரியன், சந்திரன், அக்னி எனும் முச்சுடரையும் முக்கண்ணாய்ப் பெற்ற முதலோனே! "ஸ்வஸ்திகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ரோகிணி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், பூசம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், சுவாதி மூன்றாம் பாதத்தில் சந்திரனும், திருவோணம் நான்காம் பாதத்தில் குருவும், அஸ்வினி முதல் பாதத்தில் புதனும், அஸ்வினி மூன்றாம் பாதத்தில் சூரியனும் சனியும் சேர்ந்திருக்க, கிருத்திகை இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் தயைகூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருப்பல்லவனீச்சுரம் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் பல்லவனேஸ்வரரிடம் அன்னை சௌந்தரநாயகி வினவினாள்.
சோமாஸ்கந்தர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முன்ஜென்மத்தில் செய்த நல்வினைப்பயனால் காமரூபம் எனும் ஸ்தலத்தில் ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்து, தோத்தாத்ரி என்ற பெயர் பெற்றான். திருமணவாழ்வின் பயனாய் ஒரு ஆண்மகவுக்குத் தந்தையானான். தன் குடும்பத்தை நல்லமுறையில் பராமரித்தாலும், மறைந்த தன் முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய நித்ய கர்மாக்களைச் செய்யத் தவறிவிட்டான். அதனால் அவன் வாரிசு நித்ய கண்டமாக நோயுற்று வாடுகிறான். புண்ணிய காலங்களில் பிதுர்காரியங்கள் செய்யாதவர்களுக்கு இதுபோன்ற துன்பங்களே வந்துசேரும். புரட்டாசி, தை, ஆடி என்ற மூன்று காலங்களில் வரும் அமாவாசை திதியில், பித்ரு காரியங்கள் செய்யாதவர்களின் வாரிசுகள் அவதிக்குள்ளாவார்கள். இந்த ஜாதகரின் பித்ரு தோஷப் பரிகாரமாக, திலதைப்பதி சென்று ஷண்ணாவதி எனும் தொண்ணூற்றாறு தர்ப்பண தினங்களில் பித்ரு காரியங்களைச் செய்தால் தோஷம் நீங்கி நலம்பெறுவான்.''
(வளரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-10/gandaravanadi-t.jpg)